Skip to main content

பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் மனு தாக்கல்!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021
PUBG Madan files petition seeking cancellation of order

 

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல்,   ஆபாசமாக பேசுதல்,  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால்,  அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

அதிகாரிகள், மனதைச் செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில், திங்கள் கிழமை (ஆகஸ்ட் 9) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்