ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை இடமாற்றம் செய்ததற்கு கோயமுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகலாயவிற்கு பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவத்தும், நீதிபதியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் நிராகரிக்க கோரியும் கோயமுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக நடைபெற்ற இதில், 75 நீதிபதிகள் கொண்ட சார்ட்டர்ட் நீதிமன்ற அந்தஸ்து உடைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை, தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் கொண்ட சிறிய நீதிமன்றமான மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது நியாயமற்றது எனவும், நீதித்துறையில் வெளிப்படை தன்மையில்லாமல் மத்திய அரசின் தலையீட்டில் நடைபெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
எந்த காரணம் அடிப்படையில் தஹில் ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் என்பதை உச்சநீதிமன்றம் கொலிஜீயம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர். தஹில் ரமாணியின் ராஜினாமாவை உச்சநீதிமன்ற கொலிஜீயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.