என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த ஜூலை 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
அதே நேரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதி முதல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலியில் உள்ள என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் வைத்துள்ளது.