சென்னை மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி தந்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது - தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது
இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வில் நடைபெற்றது. அப்போது, மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதித்தால், தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், வள்ளுவர் கோட்டம், அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்தலாம் என்றும் தமிழக அரசு வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டனர். மெரினாவில் எவ்விதப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.