தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. அறந்தாங்கியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்ட நிலையில், உடனே சரி செய்யப்பட்டது. வெளியூர்களில் தங்கியிருந்த இளைஞர்களும் தங்கள் ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். சில இடங்களில் வாக்களித்த பிறகும் கூட வேட்பாளர்களிடம் வந்து ஓட்டுப் போட்டாச்சு என்று சொல்லி பணம் வாங்கிச் சென்ற சம்பவங்களும் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாக்குப் பதிவு மையங்களை ஆய்வு செய்தார். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பார்வையிட்டார். அதே போல தஞ்சை மாநகராட்சி, பட்டுக்கோட்டை நகராட்சி உள்பட பேரூராட்சிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. சில இடங்களில் கூட்டமாகவும் பல இடங்களில் வெறிச்சோடியும் காணப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களை சக்கர நாற்காலிகளில் வைத்து அழைத்துச் சென்று வாக்களித்தனர்.