கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாண்டூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் யோகஸ்ரீ என்ற குழந்தைஉள்ளது. ராஜகுமாரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரசவத்திற்காக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
இதையடுத்து, குழந்தை யோகஸ்ரீயை கிளாப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு கொண்டு சென்ற வேல்முருகன், குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு மாமியாரிடம் விட்டுவிட்டு மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில், பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த யோகஸ்ரீ, சாதம் வடித்து வைத்திருந்த சுடுகஞ்சி தண்ணீரில் தடுமாறி விழுந்துள்ளார். அதில் குழந்தையின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை யோகஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர். சுடுகஞ்சி தண்ணீரில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.