சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று துபாயிலிருந்து விமானத்தில் வருகை தந்த சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் காரில் ஆத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்தக் கார் விக்கிரவாண்டி புறவழிச்சாலை அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னதச்சூரைச் சேர்ந்த செல்வம், விக்கிரவாண்டி கக்கன் நகரைச் சேர்ந்த தயாளன், அவரது மனைவி சந்திரா, மணிகண்டன் ஆகிய மூவரும் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
சென்னையிலிருந்து ஜெயபாலன் ஓட்டி வந்த கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சர்வீஸ் சாலையில் ஓரமாக பேசிக்கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதிவிட்டு சாலையோரம் இருந்த வயல்வெளியில் போய் இறங்கி நின்றது. இந்த விபத்தில் செல்வம், தயாளன், அவரது மனைவி சந்திரா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தயாளன் தம்பதியருடன் பேசிக்கொண்டிருந்த மணிகண்டன், காரை ஓட்டி வந்த ஜெயபாலன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இதில் மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதில் காரில் பயணம் செய்த ஜெயபாலனின் அக்கா, அவரது மகள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த உடனே விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, டி.எஸ்.பி ரவீந்திரன், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் நாயக்கர்கள், சப்-இன்ஸ்பெக்டர் பழனிநாதன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு அய்யனார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அப்பாவிகள் நான்கு பேர், தறிகெட்டு ஓடிய கார் மோதி உயிரிழந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.