Skip to main content

'குற்றவாளிகளைப் பாதுகாப்பது காவல்துறைக்கு அழகல்ல'-எல்.முருகன் பேட்டி

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
'Protecting criminals is not attractive to Tamil Nadu Police' - L. Murugan interview

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டு கவுன்சிலராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது வார்டின் சில பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

அந்த பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர், தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது குறித்து கவுன்சிலர் கவிதாவிடம் புகார் செய்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போனதால், கவிதாவின் கணவர் கவுதமை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ஏரியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வாலிபர் கவுதம் கூறுகிறார். அதற்கு கவுன்சிலர் கவிதா, ‘அப்படியெல்லாம் செய்ய முடியாது’ என்று கூறுகிறார். அப்போது அந்த வாலிபர், ‘சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாவிட்டால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்’ எனக் கூறுகிறார். இப்படி வாக்குவாதம் தொடர்கிறது. அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர் வாலிபருக்கு ஆதரவாக வர, அவரிடம் கவிதாவின் கணவர், ‘நீ எங்களுக்கு ஓட்டுப்போட்டியா?’எனக் கேள்வி கேட்கிறார். அப்போது வாலிபர் குறுக்கிட, கவிதாவின் கணவர் கவுதமை கன்னத்தில் அறைந்து தாக்கியதோடு வீடியோ முடிகிறது. இந்த தாக்குதல் கழுத்தில் எழும்பு முறிவு ஏற்பட்ட கவுதமை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கவிதாவின் கணவர், வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'Protecting criminals is not attractive to Tamil Nadu Police' - L. Murugan interview

இந்நிலையில் தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில், ''நம்முடைய மேட்டுப்பாளையத்தில் ஒரு இளைஞர் அந்தப் பகுதியினுடைய காங்கிரஸ் கவுன்சிலரிடம் அந்தப் பகுதியை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்கிறார். அதற்கு கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை கடுமையாக தாக்கி தற்பொழுது சீரியஸாக ஹாஸ்பிடல் இருக்கிறார். ஆனால் இரண்டு நாட்களாகியும் தமிழக அரசு கவுன்சிலரையோ கணவரையோ கைது செய்யவில்லை. மாறாக அந்த இளைஞர்  மீதும், தாயார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை எந்த அளவிற்கு சீர்கெட்டு போயிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஒரு இளைஞர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். கொடூரமாக தாக்கப்பட்டு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட சம்பவத்தில் கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் குற்றவாளிகளை பாதுகாப்பது என்பது தமிழக காவல்துறைக்கு அழகல்ல.

எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யூடியூபிலும் பேஸ்புக்கிலும் ஏதாவது தகவல் போட்டால் அவர்களை காலை 5 மணிக்கு, விடியற்காலை 2 மணிக்கு எல்லாம் போய் கைது செய்யும் காவல்துறை இளைஞர் தாக்கப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் வழக்கில் கூட தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறாரா இல்லையா என கேட்கும் அளவிற்கு இருக்கிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்