திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் கந்தன்குடி ஊராட்சி குளக்கரை கிராமத்தில் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் திறப்பு விழா மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் மதிவாணன் வரவேற்றார். இதில் புதிய ரேஷன் கட்டடத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
அதன் பின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் பொதுமக்களுக்கு அலைச்சல் இல்லாமல் உரிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதுபோன்ற நாயவிலை கடை கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று மாநிலம் முழுவதும் அனைத்து நியாயவிலை கடைகளில் சொந்த கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முழு நேர நியாயவிலைக் கடைகள் ரூ.10 லட்சம் மதிப்பிலும், பகுதி நேரக்கடைகள் ரூ.7 லட்சம் மதிப்பிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் கட்டுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தால் 15 நாட்களில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி பொதுமக்களின் வசதிக்காக ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் இருந்து வரும் நியாயவிலைக் கடைகளை இரண்டாக பிரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நியாயவிலை கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாது மற்றும் வயதானவர்கள் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் கிடைக்கும் வகையில் அதற்குரிய படிவத்தினை பூர்த்தி செய்து அவர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளில் வழங்கும் பட்சத்தில் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரம் குடும்ப அட்டைகள் இருந்துவரும் நிலையில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.