சேலத்தில் கடந்த இரண்டு நாட்களில் காவல்துறை தனிப்படையினர் நடத்திய திடீர் சோதனைகள் மூலம் 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாநகரில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி செவ்வாய்பேட்டையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பரத்சிங், ஓம்சிங், தீப்சிங், மதன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,000 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இப்பொருள்களை விற்பனை செய்த ரொக்கம் 33 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைதான நால்வர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இதையடுத்து ஜூலை 22ஆம் தேதி செவ்வாய்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சோதனையில் குட்கா பொருட்களை விற்றதாக சுரேஷ்குமார், சேதுராமன், கார்த்தி, அர்ஜூன் சிங் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் சிறார் குற்றவாளி ஒருவனும் கைது செய்யப்பட்டான். இந்தக் கும்பலிடமிருந்து 312 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஜூலை 29ஆம் தேதி சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள பிஎஸ்எம் லாரி நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு லாரி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய அந்த லாரியை சோதனை செய்தனர். அதில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 7,300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா இருப்பது தெரிய வந்தது. அவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில், கணேஷ் கல்லூரி அருகே ஒரு லாரியிலிருந்து பொலிரோ வாகனத்திற்கு சரக்கு மூட்டைகள் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் அந்த வாகனங்களிலும் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,397 கிலோ எடையுள்ள 72 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி, கஞ்சா மற்றும் சட்ட விரோத மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா எச்சரித்துள்ளார்.