இந்து மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் செப்டம்பர் 9 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமை வகித்தார். மேலும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் காவல் ஆணையர் ந. காமினி, சிலைகள் அமைப்பது மற்றும் ஊர்வலம், கரைத்தல் நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது, “விநாயகர் சிலை அமைக்கக்கூடிய இடம் தனியார், மாநகராட்சி மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விழா அமைப்பாளர்கள் முறையான அனுமதி கடிதம் பெற்று விநாயகர் சிலை அமைக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்படும் இடங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கீற்று, ஓலை, கம்பு போன்றவற்றால் போடப்படும் மேற்கூரை அமைக்காமல் தகரம் போன்றவற்றால் அமைக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விநாயகர் சிலை அமைக்கிற இடங்களில் வைக்கக்கூடாது. தீப்பற்றினால் அவற்றை அணைப்பதற்கு தேவையான தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தை குறிப்பிட்ட அளவு மட்டுமே வைப்பதுடன் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விழா அமைப்பாளர்கள் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாலை 3 மணி அல்லது 4 மணிக்கு ஊர்வலத்தை தொடங்கி, இரவு 10 மணிக்குள் முடிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ரசாயனப் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் அமைக்கக்கூடாது. வழிபாட்டுதலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே விநாயகர் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மற்ற மதங்களை துன்புறுத்துவது பற்றியோ வகுப்புவாத வெறுப்பு மற்றும் பிற மதங்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் எழுப்பப்படும் முழக்கங்களை எந்த காரணம் கொண்டு அனுமதிக்கக்கூடாது.
சிலைகளை கரைப்பதற்கு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக எந்தவிதமான விளம்பர பலகைகளும் வைக்கக் கூடாது. விழா அமைப்பாளர்கள் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களின் அருகே கண்காணிப்பு கேமரா வைப்பது நல்லது. கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் ஊர்வலம் நடத்த வேண்டும். சிலை அமைப்பாளர்கள் யாரும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை ஏற்படுத்தக்கூடாது.
குறிப்பிட்ட தேதி மற்றும் நேரங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முடிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதை மீறினால் சிலை அகற்றப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும். புதிதாக எந்த இடத்திற்கும் விநாயகர் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது” என்றார்.