மண்ணை மாசுபடுத்தி மக்களைப் பாதிக்கும் அளவிற்கு கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும் என ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சி வாவி காட்டு வலசு கிராமத்தில் எஸ்.பி.எம். வீவிங் மில் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சு துகள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் சுவாச கோளாறு, தோல் நோய் போன்ற பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு கஸ்பாபேட்டை ஊராட்சியில் தலைவர் சித்ரா அர்ஜுனன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.
பொதுமக்களின் மனுவை ஏற்று நிலத்தடி நீரை குடிநீர் ஆதாரத்தை மாசடையச் செய்யும் எஸ்பிஎம் வீவிங் தொழிற்சாலையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை பாதிக்கும் தொழிற்சாலையை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.