அதிமுகவை மீட்க மீண்டும் தான் வர இருப்பதாகவும், தொண்டர்கள் பயப்பட வேண்டாம் எனவும் தொடர்ந்து சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தியும் நீக்கப்பட்டார்.
நேற்று (17.06.2021) சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சி.வி. சண்முகம் தலைமையிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், பல மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சசிகலாவிடம் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பெரம்பலூர் மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.