'குட்வில் கம்யூனிகேசன்' என்ற தனியார் நிறுவனம் கடந்த தோ்தல்களில் தமிழக மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை பெற்று அதை வெளியிடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. அதில் 2011ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துக்கணிப்பில் எதிர்பார்க்காத மாற்றங்களைச் சந்தித்தது. இந்த தோ்தலில் அதே நிறுவனம் தன்னடைய பெயரை மாற்றி 'டி.இன்டலிஜன்ஸ்' என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 80 தொகுதிகளை தோ்வு செய்து வாக்கெடுப்பு நடத்தியது. அதில் சென்னை, வடதமிழகம், வடமேற்கு தமிழகம், காவிரி படுகை, மேற்குத் தமிழகம், தெற்கு மண்டலம் என்று மொத்தம் 8,500 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளை ஜெகத்கஸ்பர் இன்று திருச்சியில் வெளியிட்டார்.
கடந்த மார்ச் மாதம், 7ஆம் தேதி துவங்கிய இந்த கருத்துக்கணிப்பு, மார்ச் 24ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதில், அவா்கள் சந்தித்த மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை இன்று செய்தியாளா்களிடம் தெரிவித்தார். தமிழா்களின் கோபம் ஒருமுறை தான், இரண்டாவது முறை அந்தக் கோபம் இருக்காது என்பது தான் அவா்களுடைய உளவியல் தத்துவம். 80 சதவீத மக்கள் திராவிடக் கட்சிகளைத் தாண்டி வேறு எந்தக் கட்சியைக் குறித்தும் யோசிப்பதில்லை. அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி மீது பெரிய அளவில் கோபம் என்று பொதுமக்கள் மத்தியில் இல்லை. ஆனால், அதிருப்தி என்பது நிச்சயம் இருக்கிறது. அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் கூட்டணி தான். கடந்த 2016 சட்டமன்றத் தோ்தல் முடிவுகளை இந்த 2021 தோ்தலில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழகம் முழுவதும் சுமார் 7 சதவீத வாக்குகளை அதிமுக இழந்துவிட்டதாகவே சொல்லலாம். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணியின் அதிகபட்ச சராசரி 35 சதவீதமாகும், திமுகவின் குறைந்தபட்ச சராசரி 42 சதவீதமாக இருக்கிறது.
அதேபோல் அதிமுகவின் அதிகபட்ச அதிருப்தி 55 சதவீதமாகும், குறைந்தபட்ச அதிருப்தி 40 சதவீதமும், பாஜகவின் அதிகபட்ச அதிருப்தி 90 சதவீதம் குறைந்தபட்ச அதிருப்தி 65 சதவீதமாக உள்ளது. 10 சதவீத இளைஞா்கள் நோட்டாவிற்கு வாக்களிப்பதாக சொல்கின்றனா். இளைஞா்களின் ஆதரவு அதிமுக, திமுக என இருகட்சிகளுக்கும் மிகக்குறைவு தான். முதல் தலைமுறை வாக்குகள் அனைத்தும் நாம் தமிழா் மற்றும் மக்கள் நீதி மய்யம் என இருகட்சிகளுக்கு மட்டுமே செல்லும் நிலை உருவாகிவுள்ளது. இறுதிச் சுற்று வாக்கு சதவீதம் திமுக கூட்டணிக்கு 46 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 34 சதவீதமும், மநீம 5 சதவீதமும், நாம் தமிழா் கட்சி 7 சதவீதமும், அமமுக 4 சதவீதமும், மற்றவை 4 சதவீதமும் பெறும். திமுக 167 தொகுதிகளையும், அதிமுக 51க்கும் அதிகமான தொகுதிகளையும், மநீம – 1, அமமுக – 1 மற்றவை – 14 தொகுதிகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளனா்.