இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். பின் ஹெலிகாப்டர் மூலம் அடையாறு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிரதமர் மோடி சென்னை, கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். இதன் பின் சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து சென்னை பல்லாவரத்தில் ரூ.3684 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயரிலான பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முனையக் கட்டடம், சென்னை, கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் வந்துள்ளார்.
பல்வேறு இனங்களைச் சார்ந்த பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்களைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசானது மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து தொய்வில்லாமல் நிறைவேற்றி தரும்போது தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வகுக்கப்பட்ட கூட்டாட்சி தத்துவமும் செழிக்கும். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது.
மாநிலப் பொருளாதாரத்தின் ரத்தநாளங்களாக விளங்கும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும். சலைகளின் அடர்த்திக்குறியீட்டில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. சாலைக்கட்டமைப்பை மேலும் மேம்படுத்த பெரும் மூலதன செலவினங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டின் தேவையை நிறைவு செய்யத் தேவையான முக்கியத் திட்டங்களான சென்னை மதுரவாயல் உயர்மட்ட சாலை, சென்னை தாம்பரம் உயர்மட்ட சாலை, கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலை ஆக்குதல், சென்னை - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையையும் 6 வழித்தடமாக மேம்படுத்த வேண்டிய பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
பிரதமர் இன்று துவக்கி வைத்துள்ள வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை வழங்க வேண்டும். டிக்கெட் கட்டணத்தை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வண்ணம் குறைக்க வேண்டும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு பல ஆண்டுகளாக ரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் ரயில்வே வரவு செலவு திட்டத்தில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் திட்டங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிறைவேறாத நிலையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிப்பதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியையும் உயர்த்தி அளிக்க வேண்டும்.
அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் நோக்கமாக கொண்ட அரசாக இருப்பதால் அனைத்து துறைகளுக்கு சமமான நிதி ஒதுக்கி திட்டங்களை தீட்டி வருகிறோம். அதற்கு துணை புரிவதாக ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைய வேண்டும். ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை அண்ணாவும் கலைஞரும் வலியுறுத்தினார்கள். பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளர்த்தத்தை உணருவார் என நம்புகிறேன்” எனக் கூறினார்.