தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். முன்னதாக புயல் பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் எழுதியுள்ள இந்த கடிதத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியிடம் இன்று நேரில் அளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த உரையாடலில் தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.