போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தால் ஏற்படுகின்ற தீமைகளைப் பற்றி இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கங்கள் ஆகும்.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் விற்பனை தொடர்பான சோதனை நடத்த இன்று (29.08.2023) அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ஆவடி காவல் ஆணையாளர் கொரட்டூர் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான சோதனையை மேற்கொண்டார். மேலும் போதைப்பொருட்கள் தொடர்பான இச்சோதனை 58 இடங்களில் நடைபெற்றது. போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடைய 58 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.