குடியரசுத் தலைவரின் குன்னூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாகத் தமிழகம் வந்துள்ளார் திரௌபதி முர்மு. நேற்று காலை டெல்லியிலிருந்து கிளம்பி தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 12.05 மணியளவில் சென்ற குடியரசுத் தலைவர், சுமார் 40 நிமிடங்கள் தரிசனம் செய்தார். அவரது தரிசனத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சில மணிநேரங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் சிறிது நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கோவைக்கு சென்று ஈஷா யோகா மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு கோவையில் நேற்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த நிலையில், தற்போது அவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மதியம் 12.15 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.