
ஏழ்மையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களைக் குறிவைத்து வேலைக்குச் சேர்த்து அவர்களிடம் வீடியோ காலில் பேசி பாலியல் தொல்லை அளித்து வந்த பர்னிச்சர் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையில் இயங்கி வரும் குமரன் பர்னிச்சர் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார். தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்தவர்.தனது பர்னிச்சர் கடையில் விற்பனையாளர் பணிக்கு பெண்கள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களைக் குறிவைத்து வேலைக்குச் சேர்த்துள்ளார். இந்நிலையில் பணிக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். மேலும் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னரும் வீடியோ காலில் பெண்களை வற்புறுத்திப் பேசச் சொல்லி பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இப்படியே நாட்கள் சென்ற நிலையில் தங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் சம்பந்தப்பட்ட பெண்கள் இதனை வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த ஒரு பெண் அருண்குமாரின் செல்போனில் கடையில் பணியாற்றும் சக பெண் ஊழியர்களின் ஆபாசப் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். உடனே சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இதுகுறித்து பெண் தகவல் தெரிவித்துள்ளார். அதே நேரம் மறுபுறம் பர்னிச்சர் கடை உரிமையாளர் அருண்குமார் வீடியோவில் உள்ள பெண்களை அழைத்து அவர்களிடம் பணம் கொடுத்து இதை வெளியே சொல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த தகவலை வெளியிட்ட பெண்ணை எதிர்த்தால் பிரச்சனையாகும் என நினைத்து எதிர்க்காமல் காதலிக்க முயன்ற அருண்குமார். அந்தப் பெண்ணையும் காலப்போக்கில் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை மற்றும் கடையில் பணியாற்றும் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அருண்குமார் மொபைல் போனில் இருந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்தனர். அதேநேரம் வீடியோவில் இருக்கும் பெண்களை தனக்குச் சாதகமாகப் பேச வைப்பதற்காக அந்தப் பெண்களை அழைத்து வந்த நிலையில், அப்பெண்கள் போலீசார் விசாரணையில் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை விவரித்துள்ளனர். இதனையடுத்து கொடூரன் அருண்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.