Skip to main content

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் முன்னாள் காவல் ஆய்வாளர் கைது!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

police

 

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளரை பிணையில் வெளிவராத வாரண்ட் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துக்களை அபகரித்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விவகாரம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொழிலதிபர் கடத்தல் மற்றும் சொத்துக்கள் அபகரித்த விவகாரத்தில் தொடர்புடைய திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், 3 காவலர்கள், ஆந்திர தொழிலதிபர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகுமார், ஆந்திர தொழிலதிபரான வெங்கட சிவநாக குமார் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு தலைமறைவாக இருக்க பணம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவியதாக சவுக்கத் அலி, நந்த குமார் மற்றும் சரவண குமார் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வந்த உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு இடங்களில் சிபி சிஐடி போலீசார் சோதனை நடத்தி வழக்கு தொடர்புடைய பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து டவர் லொக்கேஷனை வைத்து பல மாவட்டங்களுக்கு சென்று கடந்த ஓராண்டுகளாக தேடி வந்தனர்.

 

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் சென்னையில் அவரது நண்பரின் வீட்டில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குறிப்பாக கைது செய்யப்பட்ட பின்பு சரிவர விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  பிணையில் வெளிவராத வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் சிவகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு சரிவர ஆஜராகாததால் சிபிசிஐடி கேட்டு கொண்டதன் அடிப்படையில் பிணையில் வெளிவராத வாரண்ட்  நீதிமன்றம் மூலம் பெற்று காவல் ஆய்வாளர் சரவணனை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்