பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் ஆகிய இரண்டு கிராமங்களில் சுமார் 250 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுப்பதிவு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோரைக்குப்பம் கிராமத்தில் உள்ளது. சாலை வழியாக சென்றால் 7 கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்பதால், படகில் பக்கிங்ஹாம் கால்வாயைக் கடந்து சென்று இரண்டு கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்களும் ஓட்டுப்பதிவு செய்தனர்.
தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் கிராமங்களுக்கும், கோரைக்குப்பம் கிராமத்திற்கும் இடையே 500 மீட்டர் அகலத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் ஆகிய இரண்டு கிராம மக்களும் ஓட்டுப்பதிவு செய்ய கோரைக்குப்பத்திற்கு சாலை வழியாக செல்ல வேண்டுமேயானால் 7 கி.மீ பயணிக்க வேண்டி இருக்கும். போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் அங்கிருந்த கிராம மக்கள் பக்கிங்ஹாம் கால்வாயைப் படகின் மூலம் கடந்து கோரைக்குப்பத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்துவிட்டு திரும்பினர். தேர்தல் சமயங்களில் இதுபோன்ற சிரமமான சூழல் நிலவுவதால், வாக்குச்சாவடியை தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.