18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் நேற்று (01-06-24) வெளியிட்டது. அதில், இந்தியாவில் உள்ள பல செய்தி நிறுவனங்கள், பா.ஜ.க 350க்கும் மேல் இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பிறர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்குத் தெரியவில்லை. தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து செலவு செய்தால் காந்தியைப் பற்றித் தெரிந்திருப்பார். நான் அரசியல்தான் செய்கிறேன். ஆனால், அரசியல் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று கூறினார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வந்தார். அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் வெளியாகும் வரை அவரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார். மகாத்மா காந்தி பற்றிய பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.