கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள த.பிரபுசங்கர் இ.ஆ.ப. 16ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடையே பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக பெறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். அதன்படி எங்கள் பணி இருக்கும். ‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா நிரனால் பவர்க்கு’ என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாக்கிற்கேற்ப மாவட்ட நிர்வாகத்தை செம்மையான முறையில் நடத்தி கரூர் மாவட்ட மக்களுக்கு வழங்குவதையே என்னுடைய தலையாய கடமையாக ஏற்று செய்வேன்.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையிலேயே என்னுடைய செயல்பாடுகள் இருக்கும். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சீரிய முறையில் தீர்ப்பதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் நிலை உருவாக்கப்படும். மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தில் நான் செயல்படுவேன். வேளாண்மை, தொழில்துறை, சுகாதாரத்துறை ஒருங்கிணைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தியும், மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தனிக்கவனம் செலுத்தப்படும்.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நமது தமிழ்நாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியாலும், தொடர்ந்து எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளாலும் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது கரூர் மாவட்டத்திலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் கரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர் உழைப்பை செலுத்தும்” என்றார்.