சென்னையின் மிகமுக்கிய இடங்களுள் ஒன்றான மைலாப்பூரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சாலையின் நடுவே கழிவுநீர் பாதை மூடப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மைலாப்பூரின் 125 ஆவது வார்ட், பஜார் சாலையில் உள்ள ஒரு வீதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் பாதை மூடப்படாமலேயே இருக்கிறது. சாலையின் நடுவே அமைந்திருக்கும் இந்த பெரிய பள்ளம் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாடுவதற்கும் இடையூறாக இருப்பதாக மாநகராட்சியில் தெரிவிக்கப்பட்டும், மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல், மாலை அல்லது இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியவர்கள் என யாராவது தவறி பள்ளத்தில் விழுந்தால் எலும்பு முறிவோ அல்லது உயிரிழப்போ கூட ஏற்படலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் மக்களின் இந்த புகார்களையும், கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக வேதனை தெரிவிகின்றனர் அப்பகுதி மக்கள்.