தென்காசி மாவட்டத்தின் கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரியப்பபுரம், ஊராட்சி திரவிய நகரில் கனிமவளம் மற்றும் சுரங்க நிதி மற்றும் எம்.எல்.ஏ. மேம்பாடுகளின் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடு நிலையப் பள்ளிக்கான புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை மாவட்டக் ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் திறந்து வைப்பதாகவும், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொள்வதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்பாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் தொகுதி எம்.எல்.ஏ.வின் பெயரும் இல்லை. அவரும் அழைக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமான மக்கள் முன்னாள் யூனியன் சேர்மன் குணம் தலைமையில், அ.தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர்களான அமல்ராஜ் இருளப்பன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடியுடன் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி முன்பு முற்றுகையிட்டனர். மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ. புறக்கணிக்கப்பட்டதை ஏற்கவில்லை. கல்வெட்டில் அவர் பெயரும் இல்லை. கல்வெட்டை அகற்ற வேண்டும். அரசு விழாவில் எம்.எல்.ஏ.வையும் அழைக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து பேலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியும் பலனில்லாமல் போனதால் கல்வெட்டை எடுக்க உறுதியளித்த பிறகே முற்றுகை வாபஸ் பெறப்பட்டது. இதனால் புதிய கட்டடத் திறப்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.