Skip to main content

“முதல்வர் அனுமதித்தாலும் காவல்துறையினர் மறுக்கின்றனர்!” - நாட்டுப்புற கலைஞர்கள்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

"Even when the Chief Minister gives permission, the police refuse ..." - Folk artists


ஈரோடு மாவட்டத்தில், திங்கள் கிழமையான இன்று ‘மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்’ ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள், தங்களது குறைகளை மனுவாக ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

 

தமிழ்நாடு நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில், நாடக கலைஞர்கள் பலர் திரண்டுவந்து, மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தனர். பிறகு, அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் கரோனா தாக்கம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், மேடை நாடக நடிகர்கள், நடிகைகள், ஒப்பனையாளர், இசையமைப்பாளர்கள், மேடை பணியாளர்கள், நாடக அரங்க அமைப்பாளர்கள் என ஆயிரக் கணக்கான கலைஞர்கள் எவ்வித வருமானமுமின்றி வறுமையில் தள்ளப்பட்டு பசியால் வாடுகின்றனர். 

 

எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வேறு எந்த ஒரு தொழிலும் செய்யத் தெரியாத காரணத்தால், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். ஒரு சிலர் கடன் சுமை காரணமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் ஜனவரி முதல் பொது நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் கிராமப்புறங்களில் நாடகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள போலீசாரிடம் அனுமதி கோரும்போது அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த பத்து மாத காலமாக பல்வேறு சிரமங்களை அனுபவித்து வரும் நிலையில், மீண்டும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை அரசு காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்