இயற்கை ஆர்வலர் போஸ்ட் மேன் சரவணன் தனது வீட்டில் பேரீச்சை மரம் வைத்து பழங்களை அறுவடை செய்து வருகிறார். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோவில் எசனை கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கையில் ஏராளமான நாட்டு வகை நிழல் தரும் சுற்றுச்சூழலுக்குப் பயன் தரும் மரக்கன்றுகளை கிராம இளைஞர்களோடு நட்டு வைத்து பராமரித்து வருகிறார் சரவணன் .
இந்நிலையில் பேரீச்சை மரத்தைத் தங்களது பகுதியில் பரிட்சார்த்தமாக சோதனை முறையில் சாகுபடி செய்வது என்று முடிவெடுத்தார். வீட்டுத் தோட்டத்தில் சாகுபடி செய்து தற்போது பேரீச்சங்காய்களை பறித்து தனது நண்பர்களிடம் உறவினர்களிடமும் தங்களது தோட்டத்தில் விளைந்த பேரீச்சங்காய்களைக் கொடுத்து வருகிறார். எந்தவித இரசாயன உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விளைந்த பேரீச்சங்காய்களைச் சுவைப்பது சுவையாக இருப்பதாகச் சுவைத்துப் பார்த்தவர்கள் கூறினர்.
மேலும் இது குறித்து இயற்கை ஆர்வலர், போஸ்ட் மேனாக வேலை பார்த்து வரும் சரவணன் கூறுகையில், துவர்ப்புச் சுவை நிறைந்த பேரீச்சங்காய்களைச் சாப்பிட கர்ப்பிணிகளுக்கு இரத்தம் நல்லமுறையில் உற்பத்தி ஆகும். வயதான பெண்கள் மற்றும் முதியோர்களும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம் என்றார். நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒரு பேரீச்சை மரத்தை வைத்து நமக்குத் தேவையான பேரீச்சம் பழம் காய்களை பறித்துச் சாப்பிடலாம். இதுவும் தற்சார்பு வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்றார்.