டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
டிடிவி ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 1ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்கு நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் காவல்துறை தடுத்ததையடுத்து வெற்றிவேலும், தங்கதமிழ்ச்செல்வனும் சட்டமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முற்பட்டனர்.
இதுதொடர்பாக இருவர் மீதும், சட்டப்பேரவை வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு இன்று விசாரனைக்கு வந்தபோது, மனுவில் குற்ற வழக்கு எண்ணை குறிப்பிடாததால் புதிய மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கு முடியும் வரை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.