கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. கரடி சித்தூர் ஏரியின் அருகே உள்ள இவரது விவசாய நிலத்திற்கு ஏரி பாசன வாய்க்காலை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் ஏரி பாசன வாய்க்கால்களை சில விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர். ஏரி பாசன வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், இவர் தனது விவசாய நிலத்திற்கு மூன்று ஆண்டுகளாக வழித்தடம் கேட்டும் அரசு அதிகாரிகளிடம் பல்வேறு கட்டமாக மனு அளித்து போராடி வந்துள்ளார்.
இதற்காக மூன்று ஆண்டுகளாக அரசின் பல்வேறு துறை அதிகாரியிடம் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கடந்த காலங்களில் பணியாற்றிய நபர் முதல் தற்போது பலரிடமும் கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார். கடைசியாக சென்னையில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் நேரடியாக சென்று இதுதொடர்பாக மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த உத்தரவினை மெத்தன போக்குடன் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் தொடர்ந்து அந்த விவசாயியை அலைக்கழிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயி சக்திவேல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விவசாயி சக்திவேல் தனது விவசாய நிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத விவசாயி சக்திவேலை தேடி அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்தில் சென்று பார்த்தபோது இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது கைபேசியை ஆய்வு செய்தபோது இறப்பதற்கு முன்பு தனது விவசாய நிலத்திற்கு செல்லபாதை வேண்டி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் என மனவேதனையுடன் தெரிவித்து பேசிய வீடியோ காட்சிகளை மேலும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுதந்திரம் கிடைத்த இந்த திருநாளில் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என பேசிய அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திரம் பெற்றதாக கூறும் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பணக்காரர்கள் மட்டுமே இங்கு வாழத் தகுதியானவர்கள். ஏழைகள் வாழ தகுதியான நாடு இது இல்லை. வெள்ளையர்கள் கருப்பர்கள் என தனித்தனி நாடுகளை உருவாக்கியுள்ள நிலையில் ஏழைகளுக்கு தனிநாடு என்றும் பணக்காரர்களுக்கு தனி நாடு என்றும் உருவாக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்' என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இறப்பதற்கு முன்பு விவசாயி சக்திவேல் வெளியிட்ட காணொளி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.