
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழகிழமை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தலைமை வகித்தார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் இராமசந்திரசேகரன் வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மத்தியஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சார்லஸ், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் இராமசந்திரசேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைத்தலைவர் மதுக்கூர். ராமலிங்கம் டாக்டர் அம்பேத்கர் இருக்கையின் உதவிப்பேராசிரியர் ராதிகாராணி, பல்வேறு புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், ஊழியர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், சிதம்பரம் நகர பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முருகேசன் தனது தலைமயுரையில் டாக்டர் அம்பேத்கர் பன்முகத்தன்மை உடையவர் என்றும், சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்வதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தனது உரையில் மனிதனுக்கு முதுகெலும்புதான் மிக முக்கியமானது அதுபோல ஒரு நாட்டிற்கு முதுகெலும்பாகிய அரசியல் அமைப்பு சட்டத்தை சிறப்பாக உருவாக்கியவர் அன்னல் பாரதரத்னா மாமேதை டாக்டர் அம்பேத்கர் என்றும் அன்றைய காலகட்டத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இக்காலம் வரை உள்ள நிலைகளை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர் என்றும் அவரது 63வது நினைவுநாளில் அவரது சிந்தனைகள்,வாழக்கை முறைகளை அடியொற்றி நாம் அனைவரும் அவர் வழிநடக்க வேண்டும் என்றும் டாக்டர் அம்பேத்கர் எந்த தனி ஜாதிக்கும் சொந்தமல்ல, அவர் இந்திய நாட்டின் அனைவருக்கும் சொந்தமானவர், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என தெரிவித்தார்.

பின்னர் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கையும், தேசிய மகளிர் ஆணையமும் இணைந்து நடத்திய மகளிருக்கான அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற எழுத்துப்போட்டியில் வெற்றி பெற்ற எட்டுபேருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கபரிசு வழங்கி, பாராட்டினார்.
அண்ணல் அம்பேத்கரின் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் மதுக்கூர். இராமலிங்கம் பேசுகையில் அம்பேத்கார் பன்முகை தன்மை கொண்டவர், அவர் வடித்த அரசியலமைப்பு சட்டத்தை சரியாக பயன்படுத்தி இருந்திருந்தால் இன்று எஸ்சி. எம்பிசி உள்ளிட்ட ஜாதிகள் இருந்திருக்காது. 8 மணி நேர வேலை. சுரங்கங்கம் உள்ளிட்ட ஆபாத்தான வேலைகளை பெண்கள் செய்யக்கூடாது, பிரசவகாலங்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் ஒரு சமூக பெண்களுக்காக சட்டம் இயற்ற வில்லை. அவரை ஒரு சமூகத்தின் தலைவர் என்று பிரித்து பார்த்தால் அதைவிட கேவலம் ஒன்றும் இல்லை. மத்திய தேர்வு ஆணையம், ரிசர்வ் பேங்க் அமைய காரணம் அம்பேத்கார் என அம்பேத்காரை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் என்றார். இருக்கையின் இணைப்பேராசிரியர் முனைவர் சௌந்திரராஜன் நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்,
’’தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமன் மறைவு தமிழகத்திற்கும், விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும். புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. அவர்களை ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் தடுத்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட நிதி வழங்கி உள்ளது. பின்னர் அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தெல்லாம் பேசுவதற்கு காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இதுகுறித்து பகிரங்க விவாதம் நடத்தவும் தயாராக உள்ளேன்.
150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் பிரதமர் மோடி. மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அதுகுறித்த ஆய்வுக்குத்தான் அனுமதி அளித்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக இன்று(6ம் தேதி) நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அதை ஆதரிப்பதில் தவறில்லை’’என்றனர்.
பாஜக மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.