வேலூர் மாவட்டத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நூற்றாண்டு விழா மற்றும் நாராயணி மருத்துவமனை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் ஹெலிபேடு தளத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் வேலூர் பாகாயத்தில் அமைந்துள்ள கிருத்துவ மருத்துவகல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தற்போது இந்தியா மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் 1961 ஆண்டே இருதய மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தனர். அதன் பின்னர் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து மற்றோரு சாதனை படைத்தனர். தற்போது மருத்துவ துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் ஒரு காலத்தில் பொதுமக்களை வாட்டி எடுத்த மலேரியா, புற்றுநோய், காசநோய், பக்காவாதம் போன்ற நோய்கள் குறைந்துள்ளது. இதற்கு மருத்துவ துறையின் வளர்ச்சி தான் காரணம். தற்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ நவீன வசதிகளுடன் செயல்படுகிறது. தற்போது மருத்துவ படிப்புக்காக கூடுதலாக 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மருத்துவ துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என பேசினார்.
சிஎம்சி நூற்றாண்டு விழாவை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை மார்கமாக தங்க கோவில் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். இதனால் போக்குவரத்தும் மாற்றப்பட்டது.
வேலூரில் இருந்து திருவண்ணாமலை 80 கி.மீ. பாகாயம் வழியாகத்தான் வேலூர் செல்ல வேண்டும். இன்று ஜனாதிபதி வந்ததால் போக்குவரத்து காலை 9 மணிக்கே மாற்றப்பட்டு வேலூர் டூ திருவண்ணாமலை சாலை மூடப்பட்டு ஆற்காடு வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன. இதனால் வேலூரில் இருந்து போளூர், ஆரணி, சேத்பட், கண்ணமங்கலம், திருவண்ணாமலை செல்ல வழக்கமான நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் செலவானது. அதோடு பேருந்து கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்பட்டது. வேலூர் மாநகரத்துக்குள் காட்பாடி டூ பாகாயம் நகர பேருந்துகள் பாகாயம் வர தடைவிதித்தது போலிஸ். மாலை 4.45 க்கு ஜனாதிபதி வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றபின் மாலை 5 மணிக்கு தான் மூடப்பட்ட சாலையை போலிஸார் திறந்துவிட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.