“இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இஸ்ரேல் புளூரிஸ்டெம் PLX மருந்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, இறக்கும் தருவாயில் உள்ள கரோனா நோயாளிகளைக் காப்பாற்றுவாரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் வெ.பொன்ராஜ்.
“கரோனா வைரஸ் தாக்கம் அதிகம் ஏற்பட்டு மரணமடையும் இளைஞர்கள், பல்லுறுப்பு பாதிப்பு அடைந்த முதியோர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பெருகுகிறது.” என்று வேதனையை வெளிப்படுத்திய அவர், “நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக மேக்ரோபேஜ் எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்து சார்ஸ்-என்-கோவ்-2 வைரஸ் மீது அதிகமாக தாக்க தொடங்கும்போது ஏற்படும் இன்பிளமேசன் என்று சொல்லக்கூடிய அழற்சியினால் வீக்கம் ஏற்படுகிறது. அது மூச்சுத் திணறலுக்கு வழி வகுக்கிறது. அதனால், வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது.
சில நேரங்களில் இரத்த உறைவு ஏற்படுகிறது, அதனால் நரம்புகளில் இரத்த செல்களினால் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடனடி மரணம் ஏற்படுகிறது. இதை ஆஸ்பிரின் போன்ற இரத்தத்தை நீர்த்து போக செய்யும் பாராசிட்டமால் மருந்துகள், இயற்கை மருந்துகளை ஆவி பிடிப்பதன் மூலம், ஆரம்ப நிலையில் கை கொடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நோய் முற்றிய நிலையில், இது கை கொடுத்து காப்பாற்றுமா? என்று தெரியவில்லை.
இந்த கரோனா நோய் முற்றிய நிலையில் இருந்து, பல்லுறுப்பு செயல் இழந்த முதியவர்களை காப்பாற்றி இருக்கிறது, இஸ்ரேலின் பிளசண்டா நீட்டிக்கப்பட்ட செல் மருந்து. இது, கடந்த 2 மாதத்தில் 3 நிலை நோய் சிகிச்சை பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து விட்டது. இந்த PLX சிகிச்சை முறையை கேட்கும் மற்ற நாடுகளுக்கு கொடுப்பதற்கு, இஸ்ரேல் தயாராக இருக்கிறது.
வழக்கம்போல, ICMR & MODI GOVT ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தை பக்கவிளைவுகள் அதிகம் என்று தாமதப்படுத்தி, ஏற்றுமதி செய்து விட்டு 60 நாள் கழித்து, HCQ மருந்தால் பக்க விளைவுகள் இல்லை என்று சொல்லும் அவலத்தைப்போல, இதையும் தாமதப்படுத்தாமல், இஸ்ரேல் பிரதமர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து சொன்ன பிரதமர், உடனடியாக இஸ்ரேல் புளூரிஸ்டெம் PLX மருந்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, இறக்கும் தருவாயில் இருக்கும் கரோனா நோயாளிகளைக் காப்பதற்கு முன்வர வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் முன்னெடுக்க வேண்டும்.” என ஆதங்கப்பட்டு “இவர்கள் எப்போது விழித்து மக்களைக் காக்கப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.” என்கிறார் எதிர்பார்ப்புடன்.
உலகத்தையே உலுக்கும் கரோனா வைரஸிடமிருந்து நாட்டு மக்கள் விரைந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமாகவும் உள்ளது.