தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழாவாக தொடர்ந்து நிகழ்ந்து வருவது தைப்பொங்கல் திருநாள். நகரம், கிராமம் என அனைத்து பகுதி மக்களும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் உழைப்பாளிகளை பாராட்டும் வகையிலும் இந்த தைப்பொங்கல் திருநாளை தமிழர்களின் கலாச்சார சின்னமாக தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இந்த தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிகிற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி 13.1.2023 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வைப் பற்றியும், ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிற பொங்கல் பொருட்கள், பல்வேறு நலத் திட்டங்கள், உதவிகள் குறித்தும் சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் விரிவாகப் பேசினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மாமன்ற மேயர் நாகரத்தினம், ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்கள். சங்கத்தின் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிகிற நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத ஒரு சிறப்பாக ஈரோடு மாவட்டத்தில் பத்திரிகையாளர் சங்கம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.