பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே சமயம் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்ல 8 ஆயிரத்து 478 சிறப்புப் பேருந்துகள் என அடுத்த 3 நாட்களுக்கு 13,184 சிறப்புப் பேருந்து என மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகளின் மூலம் நேற்று (12.01.2023) ஒரே நாளில் சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர் எனப் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.
மேலும் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக 14 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன எனத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.