சட்ட மேதை அம்பேத்காருக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் சிலை வைக்க நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கிறது அருந்ததியினர் பேரவை என்ற அமைப்பு. இதன் மாநில நிர்வாகியான வடிவேல் ராமன் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி மனு கொடுத்தார். அதில் அவர் ஈரோட்டின் மையப் பகுதியான பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகிய தலைவர்கள் சிலைகள் உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையும் அவ்விடத்தில் நிறுவப்பட்டு திறக்காமல் உள்ளது. மேலும் சிலைகள் வைக்க இந்த இடத்தில் போதுமான இடைவெளி உள்ளது.
இங்கு டாக்டர் அம்பேத்கரின் சிலை எங்களுடைய சொந்த செலவில் வைக்க அனுமதி வழங்க வேண்டுமென கேட்டிருந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த இடம் மிகவும் போக்குவரத்து நெரிசலான பகுதி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதோடு ஈரோடு மாநகரில் பஸ் நிலையம் - இரயில் நிலையம் - அரசு மருத்துவமனை ஆகிய எந்த இடத்திலும் அனுமதி வழங்க இயலாது என மாவட்ட கலெக்டர் 3-12-19 அன்று கடிதம் அனுப்பி விட்டார்.
அடுத்து வடிவேல் ராமன் அனைத்து தலைவர்கள் சிலை உள்ள ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரனை இன்று செவ்வாய்கிழமை மாண்புமிகு நீதியரசர்கள் சுந்தரேசன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணை நடைபெற்றது.
பிறகு நீதிபதிகள் இது சம்பந்தமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் நான்கு வாரங்களில் பதில் அளிக்க உத்திரவிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசல் என காரணம் காட்டி அம்பேத்கார் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டாலும் அந்த இடத்தில் ஒரு பகுதியில் மறைந்த ஜெயலலிதா சிலையை நிறுவி அதை திறக்காமல் வைத்துள்ளனர். எனவே அம்பேத்கர் சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தால் ஜெயலலிதா சிலை வைக்கவும் அனுமதி அளிக்க கூடாது என்றும் மேலும் அங்குள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்கிறார்கள் அருந்தியினர் இளைஞர் பேரவையினர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா இந்த வரிசையில் அம்பேத்காருக்கு இடம் கிடைக்குமா என்பது மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் பதிலில் தான் உள்ளது.