தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நாளை (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டிருந்த பொங்கல் வாழ்த்து செய்தியில், “பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன. இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்”எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது ஆளுநர் ஆர். என். ரவி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்டார். அப்போது பொங்கல் வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “நமது நாட்டில் பொங்கல் தினம் மிகவும் சிறப்பான நாள். நாடு முழுவதும் பொங்கலை பல்வேறு முறைகளில் ஒருவிதத்தில் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் இது மகர சங்கராந்தி என்றும், மக் பிஹு என்றும், எங்கோ லோஹ்ரி என்றும், தமிழ்நாட்டில் பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டு விழாவை கொண்டாடினார். இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய மோடி, ‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்ற குறளை மேற்கோள்காட்டி ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.