Skip to main content

கந்துவட்டி கொடுமையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Farmer drinking poison due to usur

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜ்குமார்(39). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ராஜ்குமாரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் பூச்சி மருந்து குடித்து உள்ளதாகக் கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் அன்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், ராஜ்குமார் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் மனைவி ஜெயந்தியிடம் கடந்த 2018 இல் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதேபோல், சிறுபாக்கம் அடுத்த அடரி களத்தூரைச் சேர்ந்த மணிகண்டனிடம் ரூ. 2 லட்சம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். அதில் வட்டியுடன் சேர்த்து ஜெயந்திக்கு ரூபாய் 13.50 லட்சமும், மணிகண்டனுக்கு ரூபாய் 5 லட்சமும் பணம் கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெயந்தி மற்றும் மணிகண்டன் இருவரும், பெரியநெசலூரில் ராஜ்குமாரைச் சந்தித்து, ஜெயந்திக்கு மொத்தம் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 32 லட்சமும், மணிகண்டனுக்கு ரூபாய் 8 லட்சமும் பணம் தர வேண்டுமெனவும், ஏற்கனவே கொடுத்த பணம் போக மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டதுடன், ஆபாசமாகப் பேசி, "பணத்தைக் கொடுக்காமல் உயிரோடு ஏன் இருக்கிறாய்" எனத் திட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 

 

இதையடுத்து ராஜ்குமார் மனைவி சங்கீதா வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்