![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/QhiU0lcT2nEYirlx8vtiXs8vIi5ZOP1ikuDFW5PXCko/1550403444/sites/default/files/inline-images/narayanasamy1_2.jpg)
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும், 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை முன்பாக ஐந்தாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் இரவு, பகலாக ஆளுநர் மாளிகை முன்பாக சாலையோரத்திலேயே படுத்துறங்கி, அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகை சுற்றிலும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரிகள் போராட்ட இடத்திலேயே நேரில் வந்து கோப்புகளில் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர்.பாலன் தி.மு.க எம்.எல்.ஏ சிவா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் லாஸ்பேட்டை ஆப்பாட்டத்தில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ராஜ்பவனில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, நெட்டப்பாக்கத்தில் விஜயவேணி எம்.எல்.ஏ, அரியாங்குப்பத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்புடன் ஆர்ப்பாடங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். .
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி உள்ளிட்டோரை திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இன்று முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி கண்டனத்தை, எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ‘புதுச்சேரியில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் மக்கள் முன்னிலையில் நேருக்கு நேராக விவாதிக்க தயாராக உள்ளேன் என்றும், அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்யட்டும். அதில் எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கட்டும்’ என சமூக வலைத்தளங்கள் மூலம் கிரண்பேடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நாராயணசாமி, ‘ கிரண்பேடியின் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். கடற்கரை காந்தி திடலில் நேருக்கு நேர் விவாதம் வைத்து கொள்ளலாம். நான் தயார். கிரண்பேடியின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ என கூறியுள்ளார்.
இதனால் புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.