புதுச்சேரியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற விழாக்களில் கேக் வெட்டியும், இனிப்புகள் - நலத்திட்ட உதவிகள் - அன்னதானம் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியின் 49 வது பிறந்த நாள் விழாவையொட்டி 49 கிலோ பிறந்த நாள் கேக் வெட்டி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகிகளுக்கு நாராயணசாமி கேக் ஊட்டினார். பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் தட்டாஞ்சாவடி சிவா, வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
பின்பு நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘’டெல்லி பாராளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டது மிகவும் சிறப்பானது. மேலும் 40 தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மொழியில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டதுடன், அவர்களில் 100 க்கு 95% பேர் பதவி பிரமாணத்தின்போது தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க என்று கூறி, பாராளுமன்றமே அதிர்கின்ற வகையில், இந்திய ஒற்றுமை, மதச்சார்பின்மையை காப்போம் என்று தமிழில் கூறியது பாராளுமன்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் மூலம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உணர வேண்டும். வருகின்ற ஜூலை மாதம் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் புதுச்சேரியில் குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.’’