சேலம் அருகே இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கணவரின் கூட்டாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலத்தை அடுத்த மன்னார்பாளையம் பிரிவு சாலையைத் சேர்ந்தவர் கோபி (26). கட்டடத் தொழிலாளி. இவரும், அல்லிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி (22). காதலர்களான இவர்கள் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கோவையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் சிபு என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளது.
கோபிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இளம் தம்பதியினரான அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டபோது, கணவருடன் கோபித்துக்கொண்டு மோகனேஸ்வரி குழந்தையுடன் சேலத்தில் வசிக்கும் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.
சேலம் வந்த பிறகு அவர், கடைவீதியில் உள்ள ஏஆர்ஆர்எஸ் ஜவுளிக்கடையில் வேலைக்குச் சென்று வந்தார். கடந்த 10ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் திரும்பினார். ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர், தன் வீட்டை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் முள் புதர் அருகே மறைந்திருந்த கோபி, மோகனேஸ்வரியை வழிமறித்து தகராறு செய்ததோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்து அறுத்து படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். காவல்துறையினர் நெருங்கியதை அடுத்து, சம்பவம் நடந்த மறுநாளே கோவை நீதிமன்றத்தில் கோபி சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், மோகனேஸ்வரியை கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கோபியின் கூட்டாளிகளான அல்லிக்குட்டையைச் சேர்ந்த மெக்கானிக் விஜி (23), ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் (24), கட்டடத் தொழிலாளி வீரங்கன் (23), ஆனந்தா பாலத்தைச் சேர்ந்த மோகன் (24) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கொலை சம்பவத்தை சினிமாவில் வருவதுபோல் நிகழ்த்தி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட மோகனேஸ்வரி, தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கோபி கூறினார். அதனால் அவருக்கு நாங்கள் நால்வரும் உதவி செய்தோம்.
சம்பவம் நடந்த அன்று, கொலை நடந்த இடத்தில் உள்ள முள் புதர் ஓரமாக கோபி ஒளிந்து கொண்டார். விஜி, காளியப்பன், மோகன் ஆகிய நாங்கள் மூவரும் கடை வீதியில் மோகனேஸ்வரி வேலை செய்து வரும் ஜவுளிக்கடை அருகே நின்று அவரை வேவு பார்த்தோம். இரவு 9 மணிக்குமேல் மோகனேஸ்வரி வேலை முடிந்து, வீட்டுக்குச் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். அதே ஆட்டோவில் மோகனும் ஏறிக்கொண்டார். மற்ற இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றோம்.
அல்லிக்குட்டை முதன்மைச் சாலையில் ஷேர் ஆட்டோ நின்றதும் அதிலிருந்து இறங்கிய மோகனேஸ்வரி வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அதுகுறித்து கோபிக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தோம். முள் புதர் அருகே மோகனேஸ்வரி சென்றபோது அவரை, அங்கு மறைந்து இருந்த கோபி இழுத்துச்சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். ரத்தக்கறையுடன் வந்த அவருக்கு புதிய உடைகளை கொடுத்தோம். அதை அணிந்து கொண்ட கோபியை, கோவைக்கு வீரங்கனுடன் அனுப்பி வைத்தோம். அவரை கோவையில் விட் டுவிட்டு வீரங்கன் சேலம் வந்துவிட்டார். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.