தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி எப்பொழுது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது, இந்நிலையில் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவுக்கு (பெண்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவுக்கு (ஆண்/பெண்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, ஆவடி, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.