
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய புதிய சட்டம் கடந்த 8ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் இஸ்லாமியர்கள் கடந்த 8ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக்காரர்கள் அப்பகுதியில் உள்ள முக்கிய சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. போலீஸ் வாகனம் உள்பட பல வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது, கற்கள் வீசப்பட்டது. இந்த கலவரத்தில் தந்தை மகன் உள்பட 3 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

இந்த வன்முறை சம்பத்திற்கு மத்தியில், முஸ்லிம் சமூகத்தினர் வகுப்புவாத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்து தம்பதியினருக்கு இந்து சடங்குகளின்படி திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முர்ஷிதாபாத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்க்கும் 20 வயது சிமுல் என்ற இளைஞருக்கும், 18 வயது ஷியுலி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரின் குடும்பத்தினரும் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருவதால் திருமணத்திற்கான செலவுகளை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இதனால் செங்கல் சூளை உரிமையாளர் முஸ்தபா ஷேக், இந்து தம்பதியினருக்கு தன்னுடைய முழு செலவில் திருமணம் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளார். மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களும், அவர்களது திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டனர். அதன்படி, டோம்கலின் கலிதாலா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில், உணவு, அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வன்முறைக்கு மத்தியில் இருவேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தை காட்டுகிறது.