தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரங்களில் பிரபலமானது மொய்விருந்து..
திருமணம், காதணி விழா, போன்ற விழாக்களில் உறவினர் உதவி செய்வது மொய் என்பதை மாற்றி 1980 கால கட்டத்தில் தனியாக கறி விருந்து கொடுத்து மொய் வாங்கியதால் அதற்கு மொய் விருந்து என்றானது.
இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பை 100 சதவீதமாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அழைப்பிதழ்கள் அச்சடித்து கொடுத்தனர். ஆனால் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி பகுதியில்.. தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை ஆலோசனையின் பேரில், நேர்மையான மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று மாலை "தேர்தல் விழிப்புணர்வு மொய்விருந்து விழா" நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, விவிபேட் எந்திரத்தில், மாதிரி சின்னங்களில் வாக்களித்து, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு சந்தனம், பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டு, தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, பேரூராட்சி தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் தர்ஷனா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பேசிய, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன், "மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி இன்று தேர்தல் மொய்விருந்து நடத்திவிட்டோம். அதே போல தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக வரும் மார்ச் 25 திங்கள்கிழமை அன்று மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் படகுப்போட்டி நடத்தப்பட உள்ளது" என்றார்.
இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள் வாக்கு சேகரிப்பது போல உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளையும், அரசியல் கட்சி கொடிகளையும் ஏனோ மறைக்க மறந்துவிட்டனர்.