பொள்ளாச்சி பாலியல் வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரீசன் ஆகிய நால்வருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
திமுக சார்பில் இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எம்பி. கனிமொழி தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள், மாதர் சங்க அமைப்புகள், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் பங்குபெற்றன. இந்த போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் மேலும் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டம் முடியும் தருவாயில் தேர்தல் விதிககளை மீறி இந்த போராட்டம் நடந்துள்ளதாக போலீசார் எம்பி கனிமொழி மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக நிர்வாகிகளை கைது செய்தனர்.