Skip to main content

''வழக்கறிஞர் சங்கத்தில் அரசியல் வரக்கூடாது'' - வேட்புமனு தாக்கலுக்கு பின் வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் பேட்டி

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வருகிற ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் மனுவாக தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தற்போதைய தலைவர் மோகன கிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் ஜனவரி 9 ஆம் தேதி  நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இன்றிலிருந்து மூன்று நாட்கள் வெள்ளிக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. நான் தற்போது இந்த சங்கத்தில் தலைவராக உள்ளேன். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமானது தமிழகத்தில் மிகப்பெரிய வழக்கறிஞர் சங்கம். இந்தியாவிலேயே பெரிய வழக்கறிஞர் சங்கமாகத் திகழ்கிறது.

 

130 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற ஒரு வழக்கறிஞர் சங்கம் என்று கூடச் சொல்லலாம். இந்த சங்கத்திற்கான தேர்தலில் இன்றைய தினம் நான் வேட்புமனு செய்துள்ளேன். நான் தலைவராக இருந்த காலத்தில் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். ஏராளமான போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கரோனா காலத்திலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தோம். அந்த அடிப்படையில் வழக்கறிஞர்களிடம் வாக்கு கேட்டு இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.

 

வருகின்ற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வெற்றியோடு வருவோம் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் வேட்புமனு ஆரம்பித்துள்ள நிலையில் காலையிலிருந்து ஒரு சிலர்தான் தாக்கல் செய்துள்ளார்கள். வெள்ளிக்கிழமை வரை காலம் உள்ளது. தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து பால் கனகராஜ், வேல்முருகன் மற்றும் வேறு சிலரும் போட்டியிடுகிறார்கள்.

 

இந்தத் தேர்தலில் எங்களுடைய கோரிக்கை என்னவென்று சொன்னால், வழக்கறிஞர் சங்கத்தில் அரசியல் வரக்கூடாது என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும். எங்களுடைய கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயத்தின் கோரிக்கையும் அதுதான். அந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் போராட்டங்களையும், உதவிகளையும் செய்துள்ளோம். அந்த அடிப்படையில் முன்னிறுத்தி வாக்கு கேட்டு இன்றைய தினம் இன்று தாக்கல் செய்துள்ளோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்