ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12-ம் தேதி போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும் பவானி போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில், போக்குவரத்து போலீசாரான பிரபு மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 மூட்டைகளில் 295 கிலோ அளவில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்காகக் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல், 2 காவலர்களும் பிடிபட்ட வேனை ரகசியமாகச் சேலம் மாவட்டம் வெளிப்படைக்குக் கொண்டு சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்களைப் பதுக்கினர். இதையடுத்து வேனின் டிரைவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் வேனின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வேன் உரிமையாளர் போலீசாரின் வேன் கடத்தல் மற்றும் குட்கா பதுக்கிய விவகாரம் தொடர்பாக ஈரோடு எஸ்.பி.க்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து எஸ்.பி. ஜவகர் உத்தரவின்பேரில், பவானி போலீசார், சம்மந்தப்பட்ட 2 போக்குவரத்து காவலர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், வெப்படை பகுதியில் வீட்டில் பதுக்கப்பட்ட 295 கிலோ குட்கா பொருட்களையும் கைப்பற்றி, பவானி போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை ரகசியமாக வேறு இடத்தில் பதுக்கி, போலீசாரே பேரம் பேசிய விவகாரம் பெரும் அதிருப்தி அடையச் செய்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போக்குவரத்து போலீசாரான பிரபு, சிவக்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தனர்.
எஸ்.பி.தலைமையிலான போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை ரகசியமாக வேறு இடத்தில் பதுக்கி, டிரைவரிடம் பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதன்பேரில், போக்குவரத்து போலீசாரான பிரபு, சிவக்குமார் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து ஈரோடு எஸ்.பி. ஜவகர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.