தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்றுவருகிறது. ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து விற்பனை செய்துவருகின்றனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கம்பம் பகுதிக்குக் கஞ்சாவைக் கடத்திவந்து அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனைக்காக கடத்திச் செல்லப்படுகிறது. இவற்றைக் கடத்துபவர்கள், இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரி, பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எடுத்துச் செல்கின்றனர்.
இதனைத் தடுப்பதற்காக தேனி மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கஞ்சா கடத்துபவர்களையும், பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து, கைது செய்து, சிறையில் அடைத்துவருகின்றனர். இருந்தபோதிலும் கஞ்சா கடத்திவருவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல், விற்பனையைத் தடுக்க காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின் பேரில் எஸ்.ஐ. விஜயானந்த் தலைமையில் 4 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரியர் பார்சல் மூலம் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தனிப்படையினர் தேனி நகர் முழுவதும் ஆய்வுசெய்தனர். அதில் திட்டச்சாலையில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு விசாகப்பட்டிணத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பார்சலை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அந்தப் பார்சலில் 2 அட்டைப் பெட்டிகளில் 22 கிலோ எடையில் 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைக் கண்டு அதிர்ந்துபோன காவல்துறை தனிப்படையினர், அதனைப் பறிமுதல் செய்ததுடன் பார்சலில் இருந்து அலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.