சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் சென்னையில் இரவு 01.00 மணி வரை மட்டுமே புத்தாண்டை கொண்டாட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மெரினா, சாந்தோம் உள்ளிட்ட கடற்கரையில் மணலில் செல்லும் வாகனம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக கூறுகின்றன. அதைத் தொடர்ந்து கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க குதிரைப்படைகள் கடற்கரையோரங்களில் பயன்படுத்தப்படும், மெரினா, சாந்தோம், காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். சென்னை மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பொதுமக்கள் காவல்துறையினடருன் கைகோர்த்து 2020ம் புத்தாண்டை இனிதாக வரவேற்போம்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அத்துடன் பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் தகவல்கள் குற்ற ஆவண காப்பகத்தில் சேகரிக்கப்படும்.
சென்னையில் இன்று (31.12.2019) இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை உட்புறச்சாலையில் இன்று (31.12.2019) இரவு 08.00 மணி முதல் அனைத்து வழிகளும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்படும். கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் இரவு 08.00 மணி வரை காமராஜர் சாலை வழியே செல்லலாம். காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை இன்று (31.12.2019) இரவு 08.00 மணி முதல் வாகனங்கள் செல்லாத்தடை. ஜனவரி 1- ஆம் தேதி அதிகாலை 04.00 மணிவரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.