Skip to main content

செந்தில்பாலாஜி மீது குட்கா வழக்கு போட துடிக்கும் காவல்துறை !

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

கரூர் மாவட்டத்தில் குட்கா விவகாரம் சில நாட்களுக்கு முன்பு முன்பு, நாமக்கல் மாவட்டம், கீழாம்பூர் சுங்கச்சாவடியில் போலீஸாரால் நடத்தப்பட்ட சோதனையில், பெங்களூருவில் இருந்து கரூருக்கு வந்த கன்டெய்னர் லாரியில், 3,563 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதன்படி, அந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில், கரூர் சின்ன ஆண்டான்கோயில் எஸ்.கே.எஸ் காலனியைச் சேர்ந்த தங்கராஜ், ராயனூர் கே.கே.நகர் செல்வராஜ் ஆகியோரின் மளிகைக் கடைக்கு ஏற்றிச் செல்வதாகத் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் உத்தரவின் பெயரில், ராயனூர் மற்றும் வெள்ளக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இரண்டு குடோன்களில், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 டன் மற்றும் 843 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்தனர்.

 

kutka case

 

குடோன்களை வாடகைக்கு எடுத்து மளிகைப் பொருள்களை இருப்பு வைப்பதாகக் கூறி, சட்டவிரோதமான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களைப் பதுக்கியதாக கரூரைச் சேர்ந்த கொங்கு மணி என்கிற சுப்பிரமணியை போலீஸார் முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

 

கொங்குமணி செந்தில்பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்.செந்தில்பாலாஜி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த போது கொங்குமணியும் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்த கையோடு பிரமாண்டமான இணைப்பு விழா நடத்தி அசத்தினார். அத்தோடு விடாமல் அரவாக்குறிச்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்ட செயலாளர் பொறுப்பையும் கிடைத்தது. செந்தில்பாலாஜியின் அரசியல் அதிரடியினால் அரண்டு போன அமைச்சர் விஜயபாஸ்கர் போலிஸ் துணையோடு குட்கா வழக்கில் தலைமறைவாக இருக்கும் முதல் குற்றவாளியான கொங்குமணி பிடித்து ஏதேனும் வாக்குமூலம் வாங்கி செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்கிற குற்றசாட்டு தி.மு.க. பக்கம் கேட்கிறது. கொங்குமணியோ உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கின பின்பு தான் வெளியே வருவது என்கிற முடிவோடு இருக்கிறார் என்கிறார்கள். கொங்குமணி தரப்பினர். 

சார்ந்த செய்திகள்