காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூா் இ-5 காவல்நிலையத்திற்கு உட்பட்ட வடப்பட்டிணம் புதியகிராமத்தை சோ்ந்த துரைராஜ் த/பெ இரங்கசாமி என்பவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கள்ளத்தனமாக பனங்கள் இறக்கியதாக காவல்நிலைய உதவிஆய்வாளா் செந்தில்வேலன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை அவா் அடைக்கப்பட்ட சிறையிலிருந்து துரைராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்துள்ளது. தற்பொழுது சுயநினைவு இல்லாமல் சிகிச்சைப்பெற்றுவருகிறார் துரைராஜ்.
இதுகுறித்து துரைராஜ் மகன் பிரதீப் கூறுகையில், ‘’எனது தந்தை விவசாயி. எப்பொழுதாவது பனங்கள் இறக்குவார். கடந்த ஞாயிற்றுகிழமை வயல்வெளியில சென்றுகொண்டிருந்தபோது கூவத்தூா் காவல்நிலையத்தை சோ்ந்த உதவிஆய்வாளா் செந்தில்வேலவன் தன்னுடைய சொந்தமான காரில் சென்று எனது தந்தையை வழிமடக்கி அசிங்கமாக திட்டியுள்ளார். தான் கள் ஏதும் இறக்கவில்லை என்று கூறியதற்கு கழுத்தின்பின்புறம் பலமாக அடித்து தன்னுடைய காரில் அடித்துள்ளார். மேலும் காவல்நிலையம் கொண்டு சென்றும் அடித்துள்ளார். மேலும் அவரை விடுவிக்க எங்களிடம் ரூபாய் 15,000 கேட்டார். நாங்களும் தருவதாக ஓப்புக்கொண்டும் பணம் எடுத்துவருவதற்குள் அவர் மீது வழக்கு பதிந்துள்ளார். இதுவரை அவா் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளார்கள், எந்த சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள் என்ற விவரம் தற்பொழுதுவரை எங்களுக்கு தெரியாது .
கடந்த செவ்வாய் அன்று, நான் சிறை அதிகாரி பேசுகிறேன்... உனது தந்தையை கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசுப் பொதுமருத்துவமனையில் அவசரகிசிச்சை பிரிவில் சோ்த்துள்ளோம் என்று கூறினார். நேற்றிலிருந்து எனது தந்தை மிகவும் கவலைக்கிடமாக காணப்படுகிறார். மருத்துவா்களிடம் எனது தந்தையின் உடல் நிலைப்பற்றி கேட்டதற்கு அவரது உயிர்நிலையில் இரத்தம் கசிந்துள்ளது. அதேப்போன்று தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் கோமா நிலையில் இருப்பதாக கூறினார். தற்பொழுது அவா் கைதி என்பதால் மருத்துவா்கள் சரியாக பார்ப்பதில்லை. எனது தந்தைக்கு, காவலா்களே எங்களுக்கு தெரியாமல் வழக்கறிஞா் வைத்து திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் முன்ஜாமின் வாங்கி மருத்துவமனையில் சோ்த்திருக்கிறார்கள். காவலா் ஓருவா், எனது தந்தையின் அனுமதியின்றி அவரது பெருவிரல் ரேகையை சிலகோப்புகளில் பதிந்து எடுத்து சென்றுள்ளார்’’ என்று கண்ணீருடன் கூறினார் .